Fish amino acid organic fertilizer in a glass jar with sardines, palm jaggery and bananas on a farm table

மீன் அமினோ அமிலம் செய்முறை

மீன் அமினோ அமிலமானது எளிதாகக் கிடைக்கும் மீன், நாட்டுச் சர்க்கரை மற்றும் வாழைப்பழத்தைக் கொண்டு, இயற்கை முறையில் நாமே தயார் செய்யக்கூடிய ஒரு அமிலமாகும். மீன் அமிலமானது பயிர்களுக்குச் சிறந்த வளர்ச்சி ஊக்கியாகப் பயன்படுகிறது.

யூரியாவுக்கு (Urea) மாற்றாக இதனைப் பயன்படுத்தலாம். நைட்ரிஃபையிங் பாக்டீரியா (Nitrifying bacteria) இந்த மீன் அமினோ அமிலத்துடன் வினைபுரிந்து, அமோனியாவை (Ammonia) நைட்ரேட்டாக (Nitrate) மாற்றி பயிர்களுக்கான தழைச்சத்தை தருகிறது.

இந்த மீன் அமினோ அமிலத்தை எப்படித் தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

  1. மீன் கழிவுகள் – 1 கிலோ
  2. பனை வெல்லம் (அ) நாட்டு சர்க்கரை – 1 கிலோ
  3. நன்கு கனிந்த வாழைப்பழம் – 5

தயாரிக்கும் முறை :

ஒரு பிளாஸ்டிக் வாளியில் உணவுக்குப் பயன்படாத மீன் கழிவுகளுடன், சம அளவு நாட்டுச் சர்க்கரை மற்றும் அதனுடன் நன்கு கனிந்த வாழைப்பழத்தைச் சேர்த்து நன்றாகக் கலக்கி காற்று புகாமல் மூடி வைக்க வேண்டும்.

நாற்பது நாட்கள் கழித்து வாளியில் தேன் போன்ற நிறத்தில், சற்றுக் கெட்டியான ஒரு திரவம் இருக்கும். மீன் கழிவுகள் கொஞ்சம் அடியிலேயே தங்கியிருக்கும். இந்த திரவத்திலிருந்து பழ வாடை வீசும். இப்படி பழ வாடை வீசினால் மட்டுமே மீன் அமினோ அமிலம் தயார் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு கிலோ மீன் கழிவு, ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரை மற்றும் 5 வாழைப்பழங்களைக் கொண்டு 300 முதல் 400 கிராம் மீன் அமினோ அமிலம் கிடைக்கும்.

பயன்படுத்தும் அளவு :

இவ்வாறு தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 200 மில்லி எடுத்து 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கலாம்.

கரும்பு பயிருக்கு 250 மில்லி என்ற அளவில் 15-20 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். கம்பு, சோளம் ஆகிய பயிர்களுக்கு 150 மில்லி என்ற அளவில் 20 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.

மண்ணில் இருந்து முளைக்கும் சிறிய பயிர்களுக்கு 100 மில்லி என்ற அளவில் 15 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுத்தால் போதுமானது.

தீவனப்புல் வளர்ப்பவர்கள் மீன் அமிலம் தெளிப்பதன் மூலம் அதிக விளைச்சல் பெற முடியும்.

ஒரு முறை தயார் செய்யப்படும் மீன் அமினோ அமிலத்தை 6 மாத காலம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவைப்படும் போது மீன் அமினோ அமிலத்தை எடுத்துக் கொண்டு, அதன் பின் அந்த பிளாஸ்டிக் வாளியை காற்று புகாமல் மூடி வைத்து பாதுகாக்க வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *